சூப்பர் கிங்ஸ் "ஹாட்ரிக்' வெற்றி; முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது


சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் முதல் அணியாக அடி எடுத்து வைத்தது.
ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், அரையிறுதி சாத்தியமானது.
இந்த ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பிரிஸ்பேன் நிர்ணயித்த 138 ரன்களை, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ள சென்னை அணி விரைவாக எட்டியது.
2 விக்கெட்டுகளை மட்டும் இழந்த சென்னை அணி 15.5 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சிறப்பான தொடக்கம்: சென்னை அணியின் தொடக்க வீரர்களிடம் பிரிஸ்பேன் வீரர்களின் பந்து வீச்சு எடுபடவில்லை. குறைவான ரன்களை எடுத்திருந்த பிரிஸ்பேன் அணிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியது.
கடந்த ஆட்டங்களில் சொதப்பிய ஹசி-முரளி விஜய் ஜோடி, இந்த ஆட்டத்தில் சென்னை அணிக்கு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தியது. இது சென்னையின் வெற்றியை எளிதாக்கியது.
ஹாட்ரிக் டக்கை தடுத்த விஜய்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முரளி விஜய் கடந்த 2 ஆட்டங்களிலும் டக் அவுட்டானார். எனினும், அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த தோனி, இந்த ஆட்டத்திலும் அவரையே தொடக்க வீரராக களமிறக்கினார்.
இதை உணர்ந்த முரளி விஜய், வழக்கம்போல் இல்லாமல் அதிரடியாக விளையாடினார். இதனால் அணியின் ரன் விகிதம் உயர்ந்தது.
27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தபோது விஜய் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளை விஜய் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய ரெய்னா, வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை அணியின் வெற்றி நெருங்கியது.
மேற்கொண்டு வீரர்கள் களமிறங்க அனுமதிக்காமல், ஹசி-ரெய்னா ஜோடியே அணியை வெற்றி பெற வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 சிக்ஸர்களை விளாசிய ரெய்னா 23 ரன்களில் வெளியேறினார்.
இதனால், உள்ளூர் நாயகன் தோனி களமிறங்கினார். இதனிடையே, பொறுமையாக ஆடி வந்த ஹசி 41 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார்.
சிக்ஸரில் வெற்றி: கட்டிங் வீசிய 15ஆவது ஓவரை எதிர்கொண்ட ஹசி பவுண்டரி மற்றும் 1 ரன் எடுக்க, தோனி பேட் செய்ய வந்தார். அந்த ஓவரின் 4ஆவது பந்தில் தோனி பவுண்டரி அடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார். வெற்றிக்கு மேலும் 4 ரன்கள் மட்டும் தேவைப்பட்டது. வழக்கம்போல், சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் தோனி.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஹசி 57 ரன்களும், தோனி 13 ரன்களும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது ஹசிக்கு அளிக்கப்பட்டது.
தடுமாற்றம்: முன்னதாக, முதலில் விளையாடிய பிரிஸ்பேன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.
சென்னை அணியின் கட்டுக் கோப்பான பந்து வீச்சில் பிரிஸ்பேன் வீரர்கள் ரன் எடுக்கத் தடுமாறினர்.
தடுமாற்றத்தின் தொடர்ச்சியாக அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 66 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சரிவுக்குள்ளானது. ஹார்ட்லே, கட்டிங் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தில் அந்த அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டியது.
அதிகபட்சமாக பென் கட்டிங் 25 பந்துகளில் 5 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.
சென்னை தரப்பில் ரவீந்திர ஜடேஜா, மொஹித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அரையிறுதி: 10 அணிகள் பங்கேற்றுள்ள சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதிக்கு முதல் அணியாக சென்னை தகுதி பெற்றது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள சென்னை அணி, 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள
டைட்டன்ஸ் 8 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளது. இப்பிரிவில் இடம் பெற்றுள்ள ஹைதராபாத் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம். அதேசமயம், 3 ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவிய பிரிஸ்பேன், அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

சுருக்கமான ஸ்கோர்
பிரிஸ்பேன் 137/7 (கட்டிங் 42*, ஹார்ட்லே 35, ஜடேஜா 2வி/18)
சென்னை 15.5 ஓவரில் 140/2 (ஹசி 57*, விஜய் 42, கிறிஸ்டியன் 1வி/16)

இந்த பகுதியில் மேலும்

0 comments