அரசுக்கு ரூ.322 கோடி ஈவுத்தொகை: நால்கோ வழங்குகிறது


நாட்டில் அலுமினியம் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நால்கோ (சஅகஇஞ) நிறுவனம், 2012-13-ம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரூ.322.15 கோடி வழங்கவுள்ளது.
இது ஏற்கெனவே வழங்கப்பட்ட இடைக்கால ஈவுத்தொகையைச் சேர்த்து, 25 சதவிகிதமாகும். முந்தைய நிதியாண்டில் இந் நிறுவனம் வழங்கிய ஈவுத்தொகை 20 சதவிகிதம் என இந் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனுசுமன் தாஸ் தெரிவித்துள்ளார்.
இந் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் புவனேசுவரத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
நால்கோ, நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனம். இந் நிறுவனம் துவங்கியதிலிருந்து மத்திய அரசுக்கு மொத்தம் ரூ.4,519.17 கோடி ஈவுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
ரூ.33,000 கோடியில் விரிவாக்கம்: நால்கோ நிறுவனம், ரூ.33,000 கோடியில் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழிலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. இத் தொகை அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் முதலீடு செய்யப்படும். அலுமினியம் உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மின்னுற்பத்தியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம். உற்பத்தித் திறன், லாபத்தை அதிகரிக்க புதிய திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளோம்.
மின்னுற்பத்தி, உலோகமல்லாத பிற தொழில்கள், இணைத்தல், கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளோம் என்றார்.

0 comments