நண்பனைப்போல் பழகினார் தனுஷ் - சற்குணத்தின் நய்யாண்டி அனுபவம்

களவாணி, வாகை சூடவா படத்திற்கு பிறகு இயக்குநர் சற்குணம் இயக்கி, அக்டோபர் 11 அன்று வெளிவர உள்ள படம் நய்யாண்டி. இப்படம் உருவான விதம் குறித்தும் தனுஷின் நடிப்பு குறி்த்தும் டைரக்டர் சற்குணம் அளித்த சிறப்பு பேட்டி...

நய்யாண்டி படம் 48 நாட்களில் திட்டமிட்டு எடுக்கப்பட்டது. கும்பகோணத்தில் 70 சதவீதம், தஞ்சாவூரில் 20 சதவீம் மற்றும் பொள்ளாச்சி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்.

கும்பகோணத்தில் சொந்தமாக பித்தளை பாத்திரக்கடை வைத்திருக்கும் சின்னவண்டு ரோலில் தனுஷ் மிக சிறப்பாக நடித்துள்ளார். படப்பிடிப்பின்போது, முதல்நாளே அடுத்தநாள் எடுக்கும் காட்சியை கேட்டுக்கொண்டு, சூட்டிங்கின்போது வெகு சிறப்பாக நடித்துக்கொடுத்தார். இயக்குநர் என்று பார்க்காமல் ஒரு நண்பனைப்போல பழகியதாலும் ஒரு நாள் கூட மானிட்டர் முன் வந்து காட்சி எப்படி வந்துள்ளது என்று தொல்லை பண்ணாததாலும்தான் இப்படத்தை இவ்வளவு சீ்க்கிரமாக முடிக்க முடிந்தது. படத்தில் தனுஷ் பாடிய டெடி பியர் பாட்டுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்ததில் படக்குழுவே மகிழ்ச்சியாய் இருக்கிறது.

நய்யாண்டி படத்தில் வனரோஜா ரோலில், பல்டாக்டர் படித்த ரோலில் நஸ்ரியா நடித்துள்ளார். அவரின் இயல்பான நடிப்பு பக்கத்து வீட்டு பெண் போல உள்ள தோற்றம் இன்னும் பல ரசிகர்களை இந்த படம் மூலம் பெற்றுத்தரும் என்கிறார் இயக்குநர்.

தனுஷ் நஸ்ரியா ஜோடி நடிப்பில் அவ்வளவு சிறப்பாக இருக்கிறதாம் இப்படம். இவர்களின் சந்திப்பு, இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் என சுவாரசியமான விஷயங்கள், காமெடி கலந்து ஒரு பக்கா கமர்ஷியல் படமாக கொடுக்க உள்ளார் சற்குணம். படத்தில் பிரமிட் நடராஜன், சூரி, மெரினா சதீஷ், சிங்கம்புலி சத்யன், அஸ்வின் போன்ற பெரும் கூட்டத்தை வைத்து சற்குணம் ஒரு காமெடி திருவிழாவே நடத்தப்போகிறார் என்பது உறுதி.

0 comments